| |

சொந்த வீடு - தொடர் பதிவு - 3





"சார், நான் முனியப்பா பேசுது சார். இன்னா ஆச்சுங்க சார். வரலியா?" என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை என்றாலும், முனியப்பாவை எப்படியாவது சமாளிக்க வேண்டும். 

சொல்லியிருந்தபடி நாங்கள் போகாததால் எனக்கு இந்த தண்டனை. அந்த வீட்டை பேசி முடிப்பதற்கு, இவனிடம் பேசி சமாளிப்பது எவ்வளவோ மேல்.

"இல்ல சார். இப்போ கொஞ்சம் ப்ராப்ளம். அதான் வர முடியல. வி வில் ஸீ நெக்ஸ்ட் டைம் சார்." என்று ஏதோ மழுப்பினேன்.

"சார், மனி ப்ராப்ளம்னா சொல்லுங்கோ சார். நம்ம பேங்க்தான். ஈஸியா மாடிகொட்த்தினி சார்".

"இல்ல சார். சாரி, ஐ வில் கால் யு நெக்ஸ்ட் டைம்." என்று போனை வைத்துவிட்டேன். அடுத்தடுத்து வந்த அவனது போன் கால்களை எடுக்கவே இல்லை.

இப்படியே ஒரு இரண்டு வாரம் ஓடி இருக்கும். வாரக்கடைசியில் போய் வீடு தேடுவதை கொஞ்சம் நிறுத்திவைத்திருந்தேன். ஒரு திங்கட்கிழமை காலையில் வழக்கம் போல் மெதுவாக எழுந்து, 
குளித்து வருவதற்குள் மணி 11 தாண்டி இருந்தது. 

" அம்மா, கஞ்சி ரெடியா", என்று கேட்டுகொண்டே சமையற்கட்டில் நுழைய, அம்மாவை அங்கே காணவில்லை.

" பாட்டி அம்மாவ பாத்தியா"? என்று கேட்டுக்கொண்டே வாசலில் போய் பார்க்க, யாரோ ஒருவருடன் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டு வருவது தெரிந்தது.

"கோவிலுக்கு போனாடா, இன்னும் வரல" என்று பாட்டி பின்னாடி வந்து நின்றாள்.

"இதோ வந்துட்டா பாட்டி. கூட யாரோ பேசிண்டு வரா, அதன் லேட்டாயிருக்கும்".

"பின்னாடி தெருல இருக்காளே அந்த மாமி மாதிரி இருக்கு. இப்போ கூட அவா புள்ளைக்கு கல்யாணம் ஆச்சே", என்று பாட்டி அவர்களின் புராணம் கூற, அதில் எனக்கு விருப்பம் இல்லாததால் 
உள்ளே சென்று விட்டேன்.

"என்னடா. கஞ்சி எடுத்துன்டியா. கொஞ்சம் லேட் ஆயிடுத்து." என்று அம்மா அவசரமாய் சமையற்கட்டில் நுழைய, நான் பின்னால் போய் "
யாரும்மா அது. புதுசா ஒரு ப்ரண்டா" என்று கிண்டல் செய்தேன்.

"இல்ல டா. ரொம்ப நாளா இந்த மாமி கோவிலுக்கு வருவா. இன்னிக்குதான் பேச சந்தர்ப்பம் கிடைச்சுது.
அவா புள்ளைக்கு இப்போதான் கல்யணம் ஆயிருக்கு, இங்க பக்கத்து தெருலதான் இருக்காளாம். அவன் கூட உன் கம்பெனில தான் வேல பாக்கறானாம்"

"அப்படியா, சரி எனக்கு கஞ்சி தா, பசிக்கறது" என்று சொல்லிவிட்டு, எப்போதும் போல் லேப்டாபில் உட்காரபோனேன், அவசரமாய் பின்னல் வந்த அம்மா, 
"டேய், முழுசா கேட்டுட்டுப் போ" என்று ஏதோ சொல்ல வந்தாள்.

"என்னம்மா, எனக்கு வேல இருக்கு. சீக்கிரம் சொல்லு " என்று வெறுப்புடன் கூறினேன். அவர்களின் கதையை மேலும் கேட்க எனக்கு விருப்பம் இல்லை.

"அவா இப்போ இருக்குற அபார்ட்மென்ட்ல ஒரு வீடு காலியா இருக்காம். வந்து பாக்கறேளானு கேட்டா" 

"நாளைக்கு போலாம் மா, இன்னைக்கு எனக்கு நிறைய வேல இருக்கும்மா"

"டேய், சும்மா எப்போபாத்தாலும் அதுலயேதான உக்காந்திருக்க. எழுந்து வா, இங்க தானே, போய் பாத்துட்டு வரலாம். நல்லா இருந்தா பாக்கலாம், இல்ல, புடிக்கலனா வந்துடலாம்"  
என்ற அம்மாவின் வார்த்தைக்கு என்னால் மறுப்பு சொல்ல முடியவில்லை.

"சரி வா போலாம்", என்றார் அரைமனதுடன் தயாரானேன்.

"மொதல்ல அந்த மாமியாதுக்கு போலாம், மாமி வந்து சாவி வாங்கித்தரேன்னு சொல்லிருக்கா"

"நான் மாமியாத்துகெல்லாம் வரல. நீவேனா போய் சாவி வாங்கிண்டு வா" என்று சொல்லிக்கொண்டே அவளது முகத்தை மட்டும் பார்த்தேன். திட்டு வாங்கபோவது மட்டும் உறுதி என்று 
தெரிந்தது.

நாங்கள் வாடகைக்கு இருந்த வீட்டிற்க்கு அருகில் என்பதால் நடந்தே போனோம். இந்த அபார்ட்மென்ட் கட்டத்தொடங்கும் போதெல்லாம், இப்படி ஒரு அபார்ட்மென்ட் கிடைத்தால் நன்றாக இருக்கும் 
என்று நாங்கள் சொல்லிகொள்வோம். நாங்கள் இருக்கும் அந்த காலனி ரொம்பவும் அமைதியானது. பஸ் ஸ்டான்ட், ரயில்வே ஸ்டேஷன், என்று எல்லா இடத்திற்கும் பஸ் வசதி உண்டு. 
ஆகையால், இந்த இடத்தில் வீடு கிடைத்தால் அதில் எல்லாருக்கும் ரொம்பவும் சந்தோஷம்.

"என்னடா யோசிச்சிண்டு வர." என்ற அம்மாவின் கேள்வியில் கனவு கலைந்தேன்.

"இல்லம்மா, இந்த பிளாட் இப்போதானே கட்டினா. நம்ம கூட எவ்வளோ சொல்லுவோம். இந்த பிளாட் சூப்பரா இருக்கு, கிட்டயே இருக்குனு. அதத்தான் யோசிச்சிண்டு வந்தேன்".

"ஆமான்டா, நல்ல பிளாட். கிடைச்சா நல்லாத்தான் இருக்கு. யோகம் இருந்தா கிடைக்கும். இரு, நான் போய் மாமிய பாத்து கூட்டிண்டு வரேன்" என்று கூறி உள்ளே நுழைந்தாள். 
செக்யூரிட்டி குறுக்கிட்டதால், அவனிடம் அந்த மாமியின் பெயரை சொல்லவேண்டியதாயிற்று.

"வாப்பா, மேல வா. நீ கூட என் புள்ள வேல பாக்கற கம்பெனிலதான் இருக்கியாமே. அம்மா சொன்னா" என்று சொல்லிக்கொண்டே கீழே இறங்கி வந்தாள் , அம்மா சொன்ன அந்த மாமி.

அதற்குள் நான் அந்த அபார்ட்மென்ட்டை நன்றாக ஆராய்ந்துவிட்டேன். நான்கு மாடிகள். அதிகபட்சம் 16 வீடுகளுக்குமேல் இருக்காது. ஜென்ரேடர் இருந்தாதால், லிப்ட் கண்டிப்பாக இருக்கும் 
என்று யூகித்து கொண்டேன். கீழே எல்லா கார்களும் வரிசை கட்டி நின்றுகொண்டிருந்தது. ஒரு குடும்பம் வசிப்பதற்கு தேவையான எல்லா வசதிகளும் இருந்தது. இது கிடைத்தால் நன்றாக 
இருக்கும் என்று ஆசை தோன்ற ஆரம்பித்தது.

"இது ஒண்ணுதான் காலியா இருக்கு. உங்களுக்குதான் அதிஷ்டம்னு நினைக்கறேன்" என்று அந்த மாமி சொல்லிக்கொண்டு வருவதற்குள் இரண்டாவது மாடி வந்து விட்டது. லிப்டில் இருந்து இறங்கும் போதே 
அந்த அபார்ட்மென்ட் வீட்டின் கதவை திறந்து வைத்திருந்தான் செக்யூரிட்டி.

"வாங்கோ மாமி. நீங்க பாத்துண்டு இருங்கோ. நான் இப்போ வந்துடறேன்" என்று ஏதோ அவசர வேலையாய் அந்த மாமி கீழே போக, இதில் மட்டும் என்ன புதுசா இருக்கப்போது என்று 
எண்ணிக்கொண்டே, உள்ளே சென்று நிமிர்ந்து பார்த்த எனக்கு ஆச்சர்யம்.

தொடரும்...

0 - கருத்துரை: