| |

சொந்த வீடு - தொடர் பதிவு - 2



"இன்னா சார், மனே சென்னாகித்தா?", முழுவதுமாய் பார்த்து முடித்த பின்னர் அவன் எங்களிடம் கேட்ட வார்த்தை. நாங்கள் இதுவரையில் பார்த்த அபார்ட்மென்ட் வீடுகளில் இது கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றியது.

"நல்லா இருக்கு சார்", என்று பொய் கூறினேன். எனக்கு என்னவோ பரவாயில்லை என்று தான் தோன்றியது. அனால் அப்பாவுக்கு மிகவும் பிடித்து விட்டது என்று மட்டும் புரிந்தது.

"என்னப்பா, எப்படி இருக்கு. உனக்கு புடிச்சிருக்கா?".

"நல்லா இருக்கு டா. கொஞ்சம் சின்னது தான். ஆனாலும் நல்ல களையா இருக்கு. அதுமட்டும் இல்லாம, பஸ் ஸ்டான்ட் வேற பக்கத்துலையே இருக்கு. எதாவது ஆத்தர அவசரம்னா, சௌகரியமா இருக்கும்", என்று அப்பாவின் எண்ணங்கள் பரந்து விரிவதை என்னால் யூகிக்க முடிந்தது.

"சரிப்பா, அதுக்காக பாத்தோம்னா, அஞ்சு மாடி ஏறனுமே. பாட்டிக்கு ரொம்ப கஷ்டம் பா, அவ சும்மாவே வீட்டுக்குள்ள இருக்க மாட்டா. இதுல தினமும் அஞ்சு மாடி ஏறி இறங்கனும்னா, ரொம்ப கஷ்டம் பா. எனக்கு என்னவோ கொஞ்சம் யோசிச்சி பண்ணலாம்னு தோணுது".
நாங்கள் பேசிகொண்டிருப்பதை கேட்ட முனியப்பா, " சார், 24 ஹவர்ஸ் லிப்ட் இதே சார். ஏன்னு டென்ஷன் இல்லா சார்" என்றான்.
" லிப்ட எப்படிங்க நம்பறது. திடீர்னு எதாவது ப்ராப்ளம்னா, கஷ்டம் ஆயிடும் சார்".
" டேய், இதெல்லாம் ஒரு காரணம்னு சொல்லி, வேண்டாம்னு சொல்லாதடா, அம்மாவை கூட்டிட்டு வந்து பாக்கலாம்", என்று அப்பா கூறியதும்,எனக்கு சிறிது பயம். எங்கே இந்த வீட்டையே முடித்துவிடலாம் என்று சொல்லிவிடுவாரோ என்ற பயம் தான். அப்படி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வீடு இல்லை என்பதால், என் மனதில் சிறு நெருடல் இருந்தது.
" இல்லப்பா, கொஞ்சம் வெயிட் பண்ணலாம்னு தோணுது" என்பதற்குள், முனியப்பா வந்து ஏதோ கன்னடத்தில் பேச ஆரம்பித்தான். அங்கிருந்து அப்பாவை எப்படியாவது கூட்டிகொண்டு போகவேண்டும் என்பதால்

" சரி சார், நாளைக்கு அம்மாவை கூட்டிட்டு வரோம். அவங்கதான் வீட்ல இருக்க போறாங்க. அவங்களுக்கும் புடிக்கனும்னு பாக்கறேன்." என்று சொல்லி, படிக்கெட்டில் இறங்க, முனியப்பா பின்னாடி ஓடி வந்து, " சார், பிளகே ஹத்து கன்டகே பன்னி சார்", என்று சொன்னவனிடம், சரி என்பதுபோல் மண்டையை ஆட்டிவிட்டு, காரை கிளப்பினேன். எப்போதும் முதல் கியர் விழுந்ததும் நின்றுவிடும் எனது கார், அப்போது மட்டும் விர்ர்ர் என கிளம்பியது.

"என்னடா, வீடு எப்படி இருக்கு " என்று அம்மா வாசலிலேயே கேட்டுக்கொண்டு நின்றாள்.
"பரவாயில்லைமா, கொஞ்சம் யோசிச்சி முடிவு எடுக்கணும்னு தோன்றது".
"சும்மா இருடா. அவளும் பாக்கட்டுமே. அதுக்குள்ள அவள மூட் அவுட் பண்ணாத" என்று அப்பா என்னை அதட்டிவிட்டு, அம்மாவிடம், " நாளைக்கு வரோம்னு சொல்லிட்டு வந்திருக்கோம்மா. காலைல பத்து மணிக்கு எல்லாரும் போய் பாக்கலாம்", என்று அவளின் ஆசையையும் கொஞ்சம் தூண்டி விட்டார் அப்பா.

இவர்கள் பேசுவதை பார்த்தால் நாளைக்கு பேசி முடித்து விடுவார்கள் என்று தோன்றியது. அப்படி ஆகாது. ஏனென்றால் அம்மா அவ்வளவு சீக்கிரம் எதையும் சரி என்று சொல்லிவிடமாட்டாள்..
அந்த தைரியத்தில் பலதும் மனதில் ஓடிகொண்டிருக்க

"சீக்கிரம் மூஞ்சி அலம்பிண்டு வாடா, காரக்கொழம்பும் உருளகிழங்கும் பண்ணிருக்கேன். பாட்டிக்கும் பசிக்கரதுன்னு சொன்னா. இதெல்லாம் அப்பறமா பேசிக்கலாம்" என்று கூறிவிட்டு அம்மா அவளது வேலையை பார்க்க சென்றாள்.

எப்படியும் சாப்பிடும் போது இதைதான் பேசப்போகிறோம் என்று எனக்கு தெரியும். அதனால்தான் நான் விஷயத்தை வேறு பக்கம் திருப்ப முயற்சித்தேன்.

"அம்மா ஆபீஸ்ல நேத்து ஒருத்தர் கூட பேசினேன்மா. இங்க ஜிகினி பக்கத்துல காலி பிளாட் எல்லாம் கம்மி விலைல கிடைக்குதாம்மா. சொந்த வீடு கட்டி போனா சூப்பரரா இருக்கும் இல்ல".
ஆமாம்,  சொந்த வீடு கட்டிக்கொண்டு போக வேண்டும் என்பது அம்மாவின் நீண்ட நாள் கனவு.

"என்னடா சொல்ற. எவ்வளோ சொல்றாளாம்" என்று அம்மா ஆர்வத்துடன் கேட்டாள். இது போதும் எனக்கு, இப்போது பார்த்துவிட்டு வந்த வீட்டை கைகழுவுவதர்க்கு.

தொடரும்...

1 - கருத்துரை:

யூர்கன் க்ருகியர் said...

This is what happening in all middle class indian families.

u r writing very nice..

waiting for the continuation ...