| | 1 - கருத்துரை

ஒதுக்கப்பட்டவள்

"உப்புமடச் சந்தி" என்ற இணையபக்கத்தில் வந்த படக்கவிதை இடுகைக்கு என்னுடைய படைப்பு

http://santhyilnaam.blogspot.com/2009/12/blog-post.html

சீவி முடி முடிந்து
சிங்கார சிலை போல
காணும் எவர் மனதும்
கவி பாடு - என தோன்றும்

பாவி எவன் மனதும்
பாசம் வைக்கும் போது - வந்து
வேண்டி தொடர்பறுக்கும்
நேசமறு யோசனையில்

பூசி மொழுகி தினம்
புன்னகையில் நிறுத்திவிட
மூடிக் கிடக்குதொரு
முக்காடு மாயன் - மனத்தில்

தேடி கிடைக்குமொரு
திருநாளில் எனப்பார்த்தால்
மேவி மனமுழுதும்
மெத்தனமே - நிறைந்துவிடும்

காற்றும் நின்றுவிடும்
காலமது வந்துவிடும்
வாடி விழுந்ததலை
விண்நோக்கி நிமிர்ந்துவிட்டால்

தேடி வசைமொழிவேன்
வாயடிக்கும் கூட்டத்தினை
கூடி ஒழிதிடுவேன்
கூறு அற்ற வார்த்தைகளை

நாடி நீ வந்து
பூவுலகில் விழுந்த நொடி
மாறிவிட்டதென்று உன்னை
பெற்ற கை உதறியதால்
காரிருள் கண்மறைத்த
காயமது பேயுனக்கு

நேசி நின் திருவுளத்தை
நின்பால் நானிருப்பேன்
பாடம் இதுவென்று
பொம்மையிடம் சொல்லிவிடு...

| | 1 - கருத்துரை

நண்பனே நீ எங்கு சென்றாய் ???

" வாணியின் கவிதைகள் " இணையப்பக்கத்தில் இடம்பெற்ற ஒரு பதிவிற்கான பதில் கவிதை..( கொஞ்சம் ஓவரா போறேன்னா இப்போவே சொல்லுங்க .. ப்ளீஸ்..)

http://vaninathan.blogspot.com/2009/12/blog-post_29.html

தெரியாத காற்றில் பழகிய வாசம்
புரியாத கவிதையில் தெரிந்த எழுத்துக்கள்
அறியாத பொருளிலும் ஆசை கொள்ளும் மனம்
கலையாத கனவிலும் கண்ணோட்டமிடும்
எனக்கான நண்பனே
நீ எங்கு சென்றாய் ???

| | 3 - கருத்துரை

பாடம் படித்தேன்




செவ்வனே கலைத்து வைக்கப்பட்டிருந்ததில்
எனக்கான காகிதத்தை எடுத்துக்கொண்டு
ஏற்கனவே பதிக்கபட்ட காலடிக்குள்
என்னிரு கால்களை பொருத்திகொண்டேன்

பதிக்கப்பட்ட காலடிக்கான அதிஷ்டம்
என் பாத சனியோடு சேர்ந்துகொண்டது
ஓயாமல் எனக்குள்ளே தன்நம்பிக்கை
தலைவிரிகோலமாய் தாண்டவம் ஆடியது

நீங்கி செல்ல பயம் என்றது - என்
ஆமை மனது
கடைசியில் நான் - வேறுவழியின்றி
நோட்டங்கள் நிறைந்த பார்வையினூடே

கையில் இருந்ததை நீட்டினேன்

தன்மானம் காக்கும் அறிவுகள்
தளர்ந்து விட்டது -  ஆகையால்
நீட்டிய கையை மடக்காமல் நின்றுகொண்டிருந்தேன்

மிக நாட்களாக பொழுதுபோக்கு களமாகியிருந்த
எனக்கான போர்க்களத்தில் - இன்றையதினம்
ஆச்சரியமாக - அமைதியாக இருந்தது

வெகுவாக இந்நேரம் கணைகள் - என்
பின் மூளையில் மொய்த்திருக்கும் - என்று
யோசித்ததில் நான் அதிசயித்தேன் - அதற்க்குள்
ஒரு கணை முன்னே வந்து முட்டியது

தவறான வரிசையில் நின்றமைக்கு வருந்துகிறோம் - என்று
அசாராதனமாய் கூறியதில் நான் புரிந்துகொண்டது
சரியான வரிசையில் நிற்க
தவறான பாடத்தை படித்துவிட்டேன்..

| | 1 - கருத்துரை

மரக்கட்டில்





அவனும் அவளும்
அதிஷ்ட தம்பதிகள்
மரக்கட்டிலின்
ஒரு முனையில் - அவன் பெயர்
மறு முனையில் - அவள் பெயர்
நடுவில்
பேனாவால் அவர்கள் செதுக்கிய இதயம்

| | 0 - கருத்துரை

தோட்டக்கலை



எங்கள் வீட்டு கணிணியில்
தோட்டக்கலை பயிற்சி
எலி மருந்து செலவு
முற்றிலும் இலவசம்...

| | 0 - கருத்துரை

மரம் எங்கே போச்சு




ரயில் பயணத்தின் போது
சிறு குழந்தையின் குமுறல்
"அந்த மரம் எங்கே போச்சு"
புத்திசாலித்தனமாய்
நான் யோசித்த பதில்
"அங்கதான் இருக்கும் - வரும்போது பார்க்கலாம்"
திரும்பும் போது - நாங்கள் கண்டது
அதே ரயில் - அதே மனிதர்கள்
அந்த - "மரம் எங்கே போச்சு"...

| | 0 - கருத்துரை

மிதிவண்டி மன்னாரு



மொதல் கால பெடல்ல வெச்சு
பின்னங்கால மேல போட்டு
அம்சமாதான் ஒக்காந்தாரு
எங்க ஊரு மன்னாரு

முட்டி மோதி மேடு ஏற
மூச்சு வாங்கி மிதிச்சாரு
விட்ட மூச்ச சேத்து வெச்சி
ஏறக்கதுல வுட்டாரு

எட்டனாவ வெச்சிகிட்டு
எட்டு ஊர சுத்துவாரு
எட்டு வருசம் சொந்தம் - ரூவா
எண்பதுன்னு சொன்னாரு

பம்பரமா சுத்தும் - காலு
பத்து நிமிசம் நிக்காது
முட்டி தேய மிதிச்சிகிட்டா - ஒடம்பு
சொன்ன பேச்ச தட்டாது

ரெட்ட வீலு ரெனால்ட்னு
வாய்க்கு வாய் சொல்வாரு
லட்சம் கொட்டி கொடுத்தாலும் - இந்த
வண்டிக்கீடு கிட்டாது

| | 0 - கருத்துரை

ஆகவே…..காதல் செய்வீர்




பட்டாம்பூசிகளின் அருங்காட்சியகத்தில்
நுழைந்தது போல் ஒரு உணர்வு…
தேவதைகள் சாம்ராஜ்ஜியதின்
அரசன் ஆனது போல் ஒரு பெருமை…
உலகதின் அனைத்து அணுக்களும்
ஸ்தம்பித்து நின்றது போன்ற பிரமை…
எதை வேண்டுமானாலும் கற்பனை செய்ய
கடவுளின் உத்தரவு கிடைக்கும் நாள்…..
பார்வையில் இனிமையும்
பேச்சில் மென்மையும்
நமக்கு தெரியமலே வந்துவிடும்….
ஆம்… காதலியை சந்திக்கும்
ஒவ்வொரு ஆண் மனதின் மாற்றங்கள்..

தனிமைகள் நிறைந்த மாநிலத்திற்க்கு
முதல் மந்திரியாக ஆவீர்கள்
ஒத்திகையின் பயன்கள்
விளங்கத் தொடங்கும்
வார்த்தைகள் தேடும் படலம்
மிகக்கவனமாய் ஆரம்பிக்கும்
முகக்கண்ணாடி முன் நிற்பதே
முழுநேர வேலையாக மாறும்
வாய்விட்டு சிரித்துவந்த காலம்போய்
புன்னகையின் அளவுகள் சரிபார்க்கப்படும்
உங்களுக்காகவே படைக்கப்பட்ட
ஒரு உலகத்தை – நீங்கள் உணரும் நேரம்..
நேற்று வரை பார்த்து வந்த நிலவும்
காதலியின் முகமாய் பதவி உயர்வு அடையும்...
குயில் கூவும் பாட்டுக்கும்
காதலியின் பேச்சுக்கும்
வேற்றுமை இல்லாமல் போகும்…
அனுமதிக்கான காத்திருப்புகள்
இனிதே ஆரம்பிக்கும்..
காதலியிடம் காதலை பெற்றுவிட்ட
காதலனின் மனமாற்றம்…..


| | 1 - கருத்துரை

இதுவும் ஒரு காதல் க(வி)தை


 
 
காதலின் எல்லை ஆரம்பம்
கனவுகளின் நினைவுகளை சுமந்து கொண்டு நுழைந்தேன்
முயற்சிகளில் வெற்றிபெறும் மனிதன்
முழுமையான மகிழ்ச்சியை உணர்கிறான்
அதுவும் – காதலுக்கான முயற்சியென்றால்
நடப்பவை இவைகளாகத்தான் இருக்கமுடியும்
கண் இமைத்தல் மறந்து போகும்
செவிகள் கூட மடுத்து போகும்
நட்ப்புறவும் நல்லிசையும் நான்கு காதை தூரம் போகும்
தேனமுதும் திகட்டிவிடும்
தீக்கிறையாய் தேகம் சுடும்
வானகமும் வையகமும் காதல் தூதென்றாகும்
பூவழகும் புனலழகும் புதுமையென கண்விறியும்
பாவம் இந்த இதயம் மட்டும் பகலிரவை மறந்திருக்கும்
நாம் மட்டும் உணரும் அந்த நிலநடுக்கம் வந்துவிடும்
ஒத்திகைகள் முடித்துவிட நொடிகள் கூட நீளமாகும்
இத்தனைக்கும் மேல் இந்த காதலன்றாகிவிடும்
முள்ளின் முனையில் நின்றுகொண்டு
தேவதைகளின் ஆட்டத்தை ரசித்துக்கொண்டிருந்தேன்
மெதுவாக முள் தைத்துக்கொண்டிருந்தது…
முழுவதுமாய் தைத்துவிட்டப்பிறகுதான் உணர்ந்தேன்
முள் தைத்த இடம் இதயம் என்று..
துளிர்விட்ட இலை கூட
தென்றலுக்காக ஏங்குகிற காலமிது
பாவம் என் இதயம் – மூச்சு காற்றுக்குக்கூட
பயப்படும் முதிர்ந்த சருகாய்ப்போனது…

வானவேடிக்கை போல் வாழ்ந்த காலங்கள் – இன்று
வானத்தை வேடிக்கை பார்க்கும் காலங்களாய் மாறிவிட்டன..

காலத்தின் கட்டாய மாற்றத்தினால்
கவிதை எழுதுகிறேன் – கேளுங்கள்….

நேற்றுவரை தோழியாய் இருந்த ஒருத்தியயை
காதலியாக்கிகொள்ள கடிதம் எழுதினேன்…
முதல் வரியிலேயே பேனாமுனை பிதற்றியது
இரத்த கண்ணீர் வடிப்பதுபோல்
ஒருமுனையில் ஒழுகியது – புத்திக்கு எட்டவில்லை..

முதல் காகிதத்தை கிழித்தெரிந்தேன் – ஆமாம்
பேனா அவள் கொடுத்தது..

காகிதங்கள் கரையத்தொடங்கின – ஆனால்
காதல் கடிதம் மட்டும் ஒரு வரி கூட எழுதப்படவில்லை..

முதல் நாளே சொல்லியிருந்தால்
மூன்று நாட்க்கள் கழிந்திருக்கும் – பாவம்
இன்றுதான் முற்றுப்பெற்றது கடிதத்தின் முக்கால் பகுதி..

தேடித்தேடிக் கிடைத்த வார்த்தைகள்
தீர்மானமாய் தொகுக்கப்பட்ட வரிகள்
இருபத்தியோரு வரிகளுக்குள் முடிக்க வேண்டிய கட்டாயம்
இத்தனைக்கும் இடையில் – காதலையும் சொல்ல வேண்டும்
கிழிந்து போக தயாராகிக் கொண்டிருக்கும் காகிதம்
சேர்க்க முடியா நிலையில் சிதரப்போகும் எழுத்துக்கள்
கண்ணீர்த் துளிகளை சேகரித்து வைக்கும் கண்கள்
இவையெல்லாம் சேர்ந்து தயாரித்து முடித்தன
அவளுக்கான முதல் – காதல் கடிதம்…

இமயத்தை இமைகளால் மூடிய ஒரு உணர்வு
சீனப்பெருஞ்சுவரை சிறுவிரலில் அளந்த்துவிட்ட கர்வம்
புத்தக இடுக்கில் காதல் கடிதம் சிக்கியிருந்தது
அவள் கண்களின் அசைவில் – என் காதல் சிக்கியிருந்தது

வழக்கமாய் தேவதைகள் வெள்ளை நிறத்தில் தோன்றுவார்கள்
அன்று மட்டும் (என்) தேவதை மஞ்சள் நிற சுடிதாரில்..
கண் இமைக்கும் நொடிக்குள் கண் முன்னே நின்றாள்
தேரடி வீதி பஸ்டாப்பில் தொடங்கியது – என்
காதலை அவளிடம் சொல்லும் முதல் முயற்சி…


| | 2 - கருத்துரை

இங்கதான இருந்துச்சு

வருசம் பூரா வாசம் வீசும்
பூந்தோட்டம் இருந்துச்சு
வந்த சனம் குந்தி பேச
வரப்பு மேடும் இருந்துச்சு
வயிரார எடுத்து குடிக்க
வாய்க்கால் கூட இருந்துச்சு
நிம்மதியா படுத்து தூங்க
கட்டாந்தர இருந்துச்சு
கால் நீட்டி களைப்பார
கயத்து கட்டில் இருந்துச்சு
நாலு வார்த்த நல்லா பேச
நட்புகூட்டம் இருந்துச்சு
ஒரமோரு கடன் கேக்க
ஒட்டு வீடு இருந்துச்சு
புள்ளகுட்டி விளையாட
பஸ் ரோடு இருந்துச்சு
பால் குடிச்ச பிள்ளயாரு
கோவில் கூட இருந்துச்சு
நாளெல்லாம் நீச்சலடிக்க
கேணி ஒன்னு இருந்துச்சு
அதிரசம் முறுக்கு விக்கும்
அண்ணாச்சி கடை இருந்துச்சு
பொழுதுசாய போயிட்டு வர
கட வீதி இருந்துச்சு
முக்கால்வாசி முழுசா ஒழுகும்
ஓட்டு வீடு இருந்துச்சு
எட்டுப்பட்டில் எங்க கிராமம்
உச்சமாத்தான் இருந்துச்சு
மூனு நாலு மாசம் முந்தி
சேதி ஒன்னு வந்துச்சு
கம்ப்யுட்டர் கம்பேணி காரு
வரிசை காட்டி நின்னுச்சு
கண்ண மூடி திறக்கயில
கட்டிடமா மாறிச்சு
யாரும் கேட்டா நாங்க சொல்ல
ஒரு வார்த்த மீந்துச்சு
“ரொம்ப நாளா எங்க கிராமம்
இங்கதான இருந்துச்சு"

| | 1 - கருத்துரை

ருத்ர வீணை : பூபாளம்

வலைப்பதிவு அன்பர்களுக்கு என் முதற்க்கண் வணக்க்ம்.

ஜொள்ளு சபா என்ற வலைபதிவில் எனது இடுகைகளை பதித்து வந்த நான், இனி
ருத்ர வீணை என்ற வலைபதிவில் இடுகைகளை பதிக்க விருக்கிறேன். ஜொள்ளு சபாவிற்கு நீங்கள் தந்த அதே ஆதரவை, இதற்கும் தர வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.

பின் குறிப்பு : ஜொள்ளு சபாவில் பதித்த படைப்புகளும் இதில் உள்ளது.