| |

சொந்த வீடு - தொடர் பதிவு - 4



சொந்த வீடு - தொடர் பதிவு - 1
சொந்த வீடு - தொடர் பதிவு - 2
சொந்த வீடு - தொடர் பதிவு - 3

"மாமி. இந்த பிளாட் கட்டி எத்தன வருஷம் ஆறது"
"ஒரு வருஷம் மேலே ஆயிடுத்து. இந்த பிளாட்டுக்கு நிறையபேர் வந்து பாத்துட்டு போன. யாருக்கு அதிஷ்டம் இருக்கோ அவாளுக்கு தானே கிடைக்கும்", என்ற மாமியின் வார்த்தையில் உண்மை இருக்குமோ என்று தோன்றியது.
"பாக்கலாம் மாமி. எப்படியும் 35 லக்ஷம் சொல்லுவான். அதுக்குமேல இந்த ரெஜிஸ்ட்ரேசன் வேற. அவ்வளோ எல்லாம் என்னால இபோதைக்கு முடியாது".
"ஐயோ. இல்ல இல்ல. இது 32 தான் சொல்றன். கொஞ்சம் பேசினா முப்பதுக்கு முடிக்கலாம்", என்றதும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது. இவ்வளவு நல்ல பிளாட், ஓரளவுக்கு இல்லை, நாங்கள் நினைத்ததை விடவும் மிகவும் அருமையான இடம். சமாளிக்க முடியும் என்ற விலை. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, இதை எப்படியும் முடிக்க வேண்டும் என்று தோன்றியது.
"மாமி, இந்த பர்னிச்சர் எல்லாம் அவன் எடுத்துண்டு போகலியா"
"இல்ல இல்ல. இதெல்லாம் சேத்துதான் பிளாட்".
என்னது, கரும்பும் தின்ன கொடுத்து, அதுக்கு கூலியும் கொடுக்கறான்களா, என்ற எண்ணம்தான் என் மனதில் ஓடியது.
"ஓ. அப்படியா. நல்லா இருக்கு மாமி. கிடைச்சா உங்களுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்" என்று மாமியிடம் பேசிக்கொண்டே, அம்மாவின் முகத்தை பார்த்தேன். இதுவரையில் நான் பார்த்திராத அப்படி ஒரு தெளிவு.
"கிடைக்கும். நீ பொய் மொதல்ல அவனுக்கு போன் பண்ணு. கீழ வா. நம்பர் தரேன்" என்று எங்களை கூட்டிகொண்டு கீழே இறங்கினாள் மாமி. ஒருவித பயம் கலந்த பதற்றத்துடனே நாங்கள் பின் தொடர்ந்தோம்.

அவர்களிடம் நம்பர் வாங்கி போன் செய்யலாம் என்று முயன்ற போது, அம்மா பின்னாலிருந்து,
"டேய், யாருக்கு போன் பண்ற. நாகேஷுக்கா இல்ல ஆனந்துக்கா", என்று விசாரித்தாள்.
"மொதல்ல ஆனந்துக்குதாம்மா போன் பண்றேன். மாமி அவர்கிட்டதான் மொதல்ல பேச சொன்னா", என்று சொல்லிவிட்டு அந்த சீட்டில் இருந்த நம்பரை டயல் செய்தேன்.

"ஹலோ. ஆம் ஐ ஸ்பீக்கிங் டு மிஸ்டர் ஆனந்த்"
"எஸ் ஸ்பீக்கிங்", என்றதும் என் படபடப்பு கூடியது.
"சார். ஐ யம் காலிங் ப்ரம் அரிக்கேரி. ஐ ஹாவ் ஜஸ்ட் சீன் யுவர் பிளாட் இன் தேர்", என்றதும் அவருக்கு புரிந்து விட்டது.
"கேன் யு கம் ஓவர் டு மை ஆபீஸ் டுமாரோ", என்றவரிடம்
"சார், டுமாரோ இஸ் டியூஸ்டே, ஐ வில் கம் ஆன் வெட்னெஸ்டே" என்று கூற,
"ஓகே. ஆஸ் யு விஷ். டேக் டௌன் மை அட்ரஸ்" என்று அட்ரசை சொல்லிவிட்டு வைத்து விட்டார்.
அவசர அவசரமாய் வெளியில் ஓடி வந்த அம்மா
"என்னடா ஆச்சு" என்று ஆர்வமாய் கேட்டாள்.
"நேரா வந்து பேச சொன்னாரும்மா"
"எப்போ போகப்போற"
"வெட்னெஸ்டே வரேன்னு சொல்லிருக்கேன்", என்று சொல்லிவிட்டு, என் ரூமை நோக்கி சென்றேன்.
"சரி. இன்னைக்கு சும்மா பேங்க்ல போய் கேட்டுண்டு வாடா."
"சரிம்மா. எனக்கு டைம் கிடைச்சா போறேன்" என்று சொல்லிவிட்டு, கிளம்ப தயாரானேன். என் மனதில் முழுவதும் அந்த வீட்டின் ஞாபகம்தான்.

ஆர்வம் அதிகமானதால், அன்றே ஒரு பாங்கில் போய் தேவையானவற்றை தெரிந்துகொண்டேன். நான் எப்பவும் இவ்வளவு சீக்கிரத்தில் எந்தவிஷயதையும் போய் விசாரித்ததில்லை. இது நடக்கிறது என்றால் உள்ளுக்குள் ஏதோ ஒரு உந்துதல் தள்ளிகொண்டிருகிறது என்றுதான் அர்த்தம். அது நிச்சயம் அந்த வீடு தான் என்று எனக்கு தெரியும். நாளை காலை எழுந்து சீக்கிரம் தயாராகி அந்த ஆனந்தை போய் பார்க்கவேண்டும் என்பதால், சீக்கிரமே உறங்கிவிட்டேன்.

"டேய், சீக்கிரம் ரெடியாகு. கிளம்பறதுக்கு முன்னாடி அவனுக்கு போன் பண்ணிட்டு கிளம்பு" என்று அம்மா அவள் பங்குக்கு கொஞ்சம் கூற, ஏற்கனவே என் மனதில் என்னென்ன கேட்க வேண்டும் என்று பட்டியல் போட்டுகொண்டதை ஒருமுறை சரிபார்த்துக்கொண்டேன்.

"சார். ஐ யம் காலிங் ப்ரம் அரிக்கேரி" என்று ஆரம்பித்தவுடன் அவருக்கு புரிந்துவிட்டது," எஸ், ஐ அம் வைடிங்  பார் யு" என்று பதில் வந்தது.


"சரிம்மா. அவருக்கு போன் பண்ணிட்டேன்.ரெடி யா இருக்காராம். நாங்க கிளம்பறோம்." என்று அவள் கையில் வைத்திருந்த தோசையை பிய்த்து இரண்டு வாய் போட்டுகொண்டு,"வாப்பா" என்று அப்பாவை அழைத்தேன். அப்பா வழக்கம் போல் பின்னாடி வேட்டியை மடித்துக்கொண்டு உட்கார,வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

இன்னும் உள்ளுக்குள் ஒரு இனம் புரியாத படபடப்பு. அகலக்கால் வைக்கிறோமோ , சமாளிக்க முடியுமா, இடம் நல்ல இருந்தாலும் வில்லங்கம் ஏதும் இருக்ககூடாதே, எல்லாம் சரியாகி வந்தால் பாங்கில் லோன் சீக்கிரம் கிடைக்கணுமே.. இவ்வளவு கேள்விகளுடன் வண்டி ஓட்டுவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. இத்தனையையும் தாண்டி ஒரு வேகம். இவன் எப்போதும் இப்படியே தான் இருப்பான் என்று நினைத்தவர்களிடம், இப்படி இருக்கிறேன் என்று காட்டிக்கொள்ள வேண்டும் என்று ஒரு வைராக்கியம். விதி சிலநேரத்தில் இப்படியும் நமக்கு நல்லது செய்கிறது. மதில் சுவர் இல்லாத கோட்டையை கட்டத் தொடங்கிவிட்டேன். முடித்துவைக்க இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில்.

தொடரும்..

0 - கருத்துரை: